Monday 16 December 2013

பாட்டி என்றொரு அம்மா

ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக 6 வருடங்களுக்குப் பிறகு இந்த கிராமத்திற்கு வரவேண்டிய சூழ்நிலை. கணவருக்குச் சில அலுவல்கள் இருந்ததால் நானும் என் மகள் மித்ராவும் மட்டுமே வந்திருக்கிறோம் . திருமணவிழா இனிதே நடந்திகொண்டிருக்க, எனக்கோ வள்ளி பாட்டியின் நினைவாகவே இருந்தது. அவளுடைய தழுதழுத்த குரலும்சிரிப்பும் மனதில் அலை பாய்ந்து கொண்டிருக்க அதற்குமேல் அங்கிருக்க முடியாமல் வள்ளி பாட்டியின் வீடு இருக்கும் திசை நோக்கி நடக்க ஆரம்பித்தேன் மகளைத் தூக்கிக்கொண்டு . இதே சாலையில்தான் என்னை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் செல்வதும்அழைத்து வருவதுமாயிருந்தாள் வள்ளி பாட்டி. 

8 வயதிலேயே அம்மாவை இழந்திருந்த என்னுடன் இந்த கிராமத்திற்கு பணி மாற்றம் செய்துகொண்டு வந்தார் அப்பா. புது சூழல்,சுற்றத்தாரென பழகுவதற்குச் சற்றே சிரமப்பட்டேன் என்பது மட்டும் நினைவிருக்கிறது.   தினமும் காலையில்  அவசர அவசரமாய் சமைத்துவிட்டு, என்னை ஆயத்தப்படுத்தி சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்று விட்டுவிட்டு அலுவலகம் செல்வார். மாலை என்னை அழைத்து வரும் பொறுப்பை வள்ளி பாட்டியிடம் ஒப்படைத்திருந்தார் அப்பா. அப்போதிருந்துதான் வள்ளி பாட்டியிடம் பழக்கம் ஏற்பட்டது மாலை முழுவதும் அவளுடன்தான் இருப்பேன். அவளுக்குச் சொந்தமென்று சொல்லிக்கொள்ள யாருமில்லை. சிறிய ஓட்டுவீட்டில் வாழ்ந்து கொண்டிருந்தாள். அவள் வீட்டிற்கு முன் ஒரு பெரிய புளிய மரம் இருக்கும். அந்தப் புளிய மரமும்வீடும்தான் அவளுடைய சொத்துக்கள். வீட்டுத் திண்ணையில் அமர்ந்துகொண்டு எனக்குத் தலைவாரி அலங்கரித்து மகிழ்வாள். புளியமரத்தடியில் சிறு பிள்ளைகளனைவரும் விளையாடிக் கொண்டிருப்போம். திண்ணையில் இருந்தபடி புளி குத்திக்கொண்டோ, வேறு வேலை செய்துகொண்டோ என்னைக் கண்காணித்துக்  கொண்டிருப்பாள். நாளடைவில் அவளுடன் இரவில் படுத்துறங்குவதும்பள்ளிக்குச் செல்வதுமாய் அப்பாவை மறந்த மகளாக மாறியிருந்தேன் அவளுடனான நெருக்கம் பிடித்திருந்தது போல எனக்கு. அப்பா எங்காவது ஊருக்கு அழைத்தாலும் செல்லாமல் பிடிவாதம் பிடித்து அவளுடனே இருந்துவிடுவேன். நாளடைவில் அப்பாவும் எங்களிருவரின் உலகத்திற்குள் நுழைவதை விட்டுவிட்டார்.

புளியமரத்தில் பூ பூக்கத் தொடங்கினால் பரபரப்பாகிவிடுவாள் பாட்டி. பூ கனியாகி பழுத்து கீழே விழும்போது பொறுக்கி எடுத்து பாத்திரங்களில் சேர்த்து வைப்பாள். மதிய நேரங்களில் புளி குத்திக் கொண்டிருப்பாள் பரபரப்பாய். விடுமுறை நாட்களில் நானும்சில பிள்ளைகளும் ஆளுக்கொரு கோணி ஊசியை எடுத்துக்கொண்டு அவளுக்குப் போட்டியாய் புளி குத்த ஆரம்பித்து விடுவோம் . ஒருநாள் விளையாட்டாய்  "பாட்டி,எவ்ளோ வருஷமா இந்த மரம் இருக்கு. இந்த புளி,கொட்டையெல்லாம் குத்தி என்ன பண்ணுவீங்க? பழைய புளியெல்லாம் காணோமே?" என்று கேட்டேன் பேச்சுவாக்கில்."கடையில் வித்துடுவேன் கண்ணு" என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு அறையோரமிருந்த டிரங்குப்பெட்டி ஒன்றைத் திறந்து ஒரு மஞ்சள் பையை என்னிடம் காட்டினாள். உள்ளே இருந்த கசங்கிய தாள்களில் காந்தி சிரித்துக் கொண்டிருந்தார்.  "இவ்வளவு காசை என்ன பண்ணப் போறீங்க"என்றேன்.  அவளுக்கு மட்டும் புரியும்படியான அர்த்தப் புன்னகையொன்றை உதிர்த்தாள் 

அவளுடன் திண்ணையில் படுத்தபடி நட்சத்திரங்களை எண்ணுவதும்பள்ளியில் அன்றாடம் நடந்த விசயங்களை அவளிடம் சொல்லுவதும்,அவளுடைய வாழ்க்கை வரலாறுகளைக் கேட்பதுமாய் கழிந்தன இரவுகள்.  அவள் வீட்டில் எப்போதுமிருக்கும் ஏனோ எனக்கு மிகப் பிடிக்கும். என் முதல் தோழியானாள் அவள். ஐந்து வருடங்களாய் வள்ளிப் பாட்டிதான்  என் வாழ்வாதாரமாய் இருந்தாள். மீண்டும் அப்பாவிற்குப் பணி மாறுதலாகவேறு ஊருக்குச் செல்லவேண்டிய சூழ்நிலை. வள்ளி பாட்டியுடன் தங்கி இங்கேயே படிக்கிறேனென அடம்பிடித்தும் அப்பா ஒத்துக்கொள்ளவில்லை. அங்கிருந்து கிளம்பும் நாள் பாட்டியின் மடியில் படுத்துக்கொண்டு அழுது தீர்த்தேன். அவளும் என்னுடன் அழுதாள். அதன்பின் விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் அவள் வீட்டிற்கு அழைத்துச் செல்வார் அப்பா. அவளும் சில நாட்கள் எங்கள் வீட்டில் தங்கி செல்வாள். அத்தனை நாட்களாய் நடந்த சம்பவங்களனைத்தையும் அவளைச் சந்திக்கும்போதெல்லாம் சொல்லி முடிப்பேன் "வீட்டுல இப்பலாம் தனியா என்ன பண்றீங்க பாட்டி" என்றால், "புளி குத்துவேன் கண்ணு" என்பாள். இப்படியாக எங்கள் சந்திப்பு வருடத்தில் சில நாட்கள் நிகழ்ந்து கொண்டிருக்க எனக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தன்று என்னையும் அப்பாவையும் அழைத்த பாட்டி மஞ்சள் பையொன்றை என் கைகளுக்குள் திணித்துக்கொண்டே "புளி குத்துற காசை என்ன பண்ணுவீங்கனு கேட்பே இல்ல? திறந்து பாரு அமுதா" என்று சொல்லிவிட்டு என்னை அணைத்து உச்சி முகர்ந்தாள். பைக்குள் ஒரு பட்டுப்புடவையும்,ஒரு ஜோடி தங்க வளையல்களும் இருந்தன. "இந்த கிழவியால இவ்ளோதான்டீ பேத்திக்குச் சீர் கொடுக்க முடிஞ்சது" என்றவளைப் பார்த்தபடி விக்கித்து நின்றேன் சில நொடிகள் . 

என் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மரணத்தைத் தழுவிக் கொண்டாள் பாட்டி .எண்ணங்களில் வள்ளி பாட்டி என்னுடன் பயணித்துக் கொண்டிருக்க, இதோ அவளது வீட்டின் முன் வந்து சேர்ந்துவிட்டேன். அவள் எப்போதும் அமர்ந்திருக்கும் திண்ணையும்,அச்சிறிய ஓட்டு வீடும் பாழடைந்து கிடந்தது. வீட்டின் முன்பிருந்த மரமும் காணாமற் போயிருந்தது. சிறுவயதில் அம்மரத்தடியைச் சுற்றி, சுற்றிதான் மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொண்டேன். "வாங்க பாட்டி,உங்களை வச்சு ஓட்டுறேன்" என அழைக்கும் போதெல்லாம் "பெரிய வண்டி ஓட்டக் கத்துகிட்டப்பறம் அதில் வர்றேன்டீ கண்ணு" என்ற பாட்டியின் குரல் மனதிற்குள் ஒலிக்க, ஒருமுறை கூட அவளை என்னால் பெரிய வண்டியில்(ஸ்கூட்டி) அழைத்துச் செல்ல முடியவில்லை என மனதிற்குப் புலப்பட்டது. அவளிடம் எனதன்பை முழுதாய் வெளிப்படுத்த முடியவில்லையெனத் தோன்ற , கண்கள் கரித்துக்கொண்டு கண்ணீர் வந்தது. பிஞ்சுவிரல்களால் என் கன்னம் துடைத்துக்கொண்டே "ஏன்மா அழறே?" என்ற மித்ராவிற்கு எப்படிப் புரிய வைப்பேன் "என்னை மகள்போல் வளர்த்த வள்ளி பாட்டி வாழ்ந்த இடம் இது" என்று


7 comments:

  1. பால்யத்தின் நினைவுகளை கிளறிவிட்டது உங்கள் எழுத்து.. மகள்-தாய் உறவை காட்டிலும் பாட்டி-பேத்தி உறவில் எப்போதும் ஒரு அற்புதம் இருக்கும்.. இந்த உறவில் கண்டிப்பு,அதிகாரம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது...எல்லையில்லா அன்பு மட்டுமே பிரதானமாக இருக்கும் ஒரு பாசப்பிணைப்பு அது..
    உங்கள் எழுத்து ஒரு சிறப்பான நினைவுமீட்டல்..

    ReplyDelete
  2. நெகிழ்வான நினைவலைகள்!
    மிகைப்படுத்தல் இல்லாம, ஒரு சாதாரணப் பொண்ணாச் சொல்லி இருக்கீங்க;
    இது சிறுகதையின் இலக்கணத்துக்குள் வருமா? -ன்னு கேள்வி எழுப்பலாம்;
    எனக்கும் தெரியாது; ஆனா படிக்கும் போதே பிடிச்சிப் போச்சு!

    //புளி குத்துற காசை என்ன பண்ணுவீங்கனு கேட்பே இல்ல? திறந்து பாரு அமுதா"//
    சில சென்மங்கள் தனக்கு-ன்னு வாழத் தெரியாது..
    தன் அன்புள்ளவங்க மூஞ்சியில் காணும் சிரிப்புக்கே வாழும்! dunno why!

    தனக்கென முயலா நோன்றாள்
    பிறர்க்கென முயலுநர் உண்மையானே! -ன்னு சங்கத் தமிழ்!

    //மரணத்தைத் தழுவிக் கொண்டாள் பாட்டி .எண்ணங்களில் வள்ளி பாட்டி என்னுடன் பயணித்துக் கொண்டிருக்க, இதோ அவளது வீட்டின் முன் வந்து சேர்ந்துவிட்டேன்//

    பாட்டீ-ன்னு அணைச்சிக்கிறது, அழுவறது எல்லாம் ஒன்னுமே சொல்லலை நீங்க;
    ஆனா மனசுக்குள்ளயே ஒரு பந்தம்..
    பல பேரோட வாழ்விலும் இது தான்! இந்தப் பந்தத்தை உதறவே முடியாது!
    இதுவொரு மெளன பந்தம்.. கூடவே வரும்!

    ReplyDelete
  3. பிரமாதம். அன்பின் வெளிப்பாடு. பூச்சுகள் ஏதுமின்றி இயல்பாக இருக்கிறது

    ReplyDelete
  4. எப்படி அன்பை பரிமாறி கொண்டாடியிருக்கிறார் அந்த வள்ளிப்பாட்டி. இன்றைய படித்த சமூகம் மறந்த அன்பின் நிகழ்வு இது.

    ReplyDelete
  5. அற்புதம் தங்கா :-)) வேலைக்கு போகும் பெற்றோர் இருக்கும் குழந்தைக்களுக்கு பாட்டி-தாத்தா இருப்பது அவர்கள் செய்த வரம்.

    குடும்ப அடிப்படை கொண்டு என்னை ஒரு கதை எழுதச் சொல்லி இருந்தால் நானும் என் பாட்டியை வைத்து தான் புனைவுக் கதை எழுதியிருப்பேன்... நீ முந்திக்கிட்ட... அதனால என்ன?? கிட்டதட்ட அதே பிரதிபலிப்பு... :-))

    //இதே சாலையில்தான் என்னை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் செல்வதும், அழைத்து வருவதுமாயிருந்தாள் வள்ளி பாட்டி.// அந்த சாலையை கடக்கும் பொழுதெல்லாம் இது தோன்றும்...

    // பள்ளியில் அன்றாடம் நடந்த விசயங்களை அவளிடம் சொல்லுவதும்,அவளுடைய வாழ்க்கை வரலாறுகளைக் கேட்பதுமாய் கழிந்தன இரவுகள். // இதை திண்ணையில் உக்கார்ந்து கொண்டு மாலை நான் செய்வேன்...

    பாட்டியின் தலைக் கோத மடியில் படுத்து தாலாட்டு கேட்டுக்கொண்டே அல்லது அவளது மடக்கிய கையில், அவள் தலைக்கு அருகில் என் தலை வைத்தோ தூங்கிய நாட்கள் பல...

    //எண்ணங்களில் வள்ளி பாட்டி என்னுடன் பயணித்துக் கொண்டிருக்க// இதைப் படிக்கும் பொழுதும்...

    //இந்த கிழவியால இவ்ளோதான்// இப்படிச் சொல்லி எவ்வளவோ கொடுப்பாங்க... உழைப்பை கடைசி வரை நிறுத்தவும் இல்லை. தனக்கும் சேர்த்து,பிறருக்கும் சேர்க்க முடியும் என்ற தன்னம்பிக்கையை இழக்கவும் இல்லை... இது போக ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்ததும் அவங்க தான்...

    டைரி எழுதுற பழக்கம் இல்லாத நான், அவங்க நினைவுகளை திரட்டி ஒரு 20 பக்கம் குறிப்பு எழுதி வச்சு இருக்கேன்... அவங்கள பத்தி எழுத ஒரு டைரியும் பத்தாது... என் கண்ணீரும் பத்தாது...இந்த பின்னூட்டமும் பத்தாது....

    அதிகாலைல இப்படி ஒரு அற்புதமான நினைவைக் கொடுத்ததுக்கு நன்றி....

    பளிச்ன்னு பட்டதால ஒரே ஒரு இலக்கணப் பிழை மட்டும் சொல்லிக்கிறேன்... தலைப்பு "பாட்டி என்றொரு அம்மா" இல்லாம "பாட்டி என்றோர் அம்மா"ன்னு இருக்கணும்... உயிர் எழுத்துக்கு முன்னாடி 'ஓர்' தான் வரும். 'ஒரு' வராது... மீண்டும் நன்றி :-))))

    ReplyDelete
  6. ரொம்ப நல்லாருக்கு..கேயாரெஸ் சொல்றாப்ல இது எந்த ஃபார்மட்லயும் வரலை தான். ஆனா, உணர்வு கன்வே ஆனா நல்ல எழுத்துன்னு நினைக்கிறவன் நான்..அதுல டபுள் ஒகே :))

    ReplyDelete